கள்ளக்குறிச்சி: 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பயணத்தின் வாயிலாக கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப். 6) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை ஒப்பந்தத்தை அவருடைய சம்பந்திக்கு வழங்கி இருக்கிறார். நிவாரண காலத்தில் பொதுமக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க கோரி திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அரசு நிராகரித்துவிட்டு, தேர்தல் நெருங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கியுள்ளார்.
15 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரிப் பணம் கோரிய தமிழ்நாடு அரசிடம் 5,000 கோடி கடன் தருவதாக அறிவித்துவிட்டு 10 ஆயிரம் கோடியில் மத்திய அரசு புதிதாக நாடாளுமன்ற வளாகம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலாவின் உதவியுடன் முதலமைச்சரான இவர் தமிழ்நாட்டிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் எதுவும் செய்யாமல் ஊழல் ஆட்சி நடத்திவருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பொதுமக்கள் ஏமாந்துவிடாதீர்கள். இன்று தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் அதிமுக, பாஜக அரசிடம் மாநிலத்தை அடமானம் வைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை விற்று விடுவார்கள்" என்றார்.