தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்களில் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான ராஜராஜசோழனால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர் முத்துசாமி, கட்டட கலைத்துறை வல்லுநர் மதுசூதன், தொல்லியல் துறை அறிஞர் வசந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சிலைகள், கல்வெட்டுகள், கட்டடக்கலை குறித்து ஆய்வு செய்த அலுவலர்கள், 200 ஆண்டுகளாக புனரமைப்பு மேற்கொள்ளாமலும், குடமுழுக்கு நடத்தப்படாமலும் கோயில் முழுவதும் சிதலமடைந்து காணப்படுவதாக கூறினர். அதைத் தொடர்ந்து, இக்குழுவினர் சமர்பிக்கும் அறிக்கையை அடுத்து கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.