ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ரயில் மூலமாக தினசரி வந்து செல்வதால், ஈரோடு ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.25) மதியம் 3 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் உள்ள 80 அடி உயர் மின் கோபுரத்தின் மீது வட மாநிலத் தொழிலாளர் ஒருவர் மேலே ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு ரயில்வே காவல் துறையினர், சூரம்பட்டி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர், உயர் மின் கோபுரத்தின் மீது ஏறிய வட மாநிலத் தொழிலாளியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசார் மின் கோபுரத்தின் மீது இருந்த வடமாநில இளைஞரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது, அந்த நபர் தனக்கு பல பிரச்னைகள் இருப்பதாகவும், தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், பாதிரியாரை வரச் சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். தொடா்ந்து, பாதிரியாா் போன்று உடை அணிந்து காவலர் ஒருவர் மின் கோபுரம் மீது ஏறியுள்ளார். அப்போது, பாதிரியார் உடை அணிந்து வந்தவர் பாதிரியாா் இல்லை என்பதை அறிந்ததும், வட மாநில இளைஞர் கீழே இறங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், 80 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய வட மாநிலத் தொழிலாளர், பாதி மின்கோபுரம் வரை இறங்கி வருவதும், மீண்டும் ஏறி செல்வதும் என காவல்துறைக்கு போக்கு காட்டி வந்துள்ளார். மாலையில் கனமழை பெய்த போதிலும், மின் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி வராமல் மழையில் நனைந்தபடியே மின் கோபுரத்தின் மீது அமர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில், மின் கோபுரத்தில் இருந்து இறங்கிய வடமாநில தொழிலாளியை, காவல் துறையினர் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, வட மாநிலத் தொழிலாளர் தாக்கியதில் தலைமைக் காவலர் கண்ணன், ரயில்வே உணவக ஊழியர் சாம், பொறியாளர் முகேஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குப் பிறகு மின் கம்பத்திலிருந்து குதித்து தப்ப முயன்ற நிலையில், தீயணைப்புத் துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் மார்கம் என்பதும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடமாநில நபர் தாக்கியதில் காயம் அடைந்த தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பரங்கிமலை அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரம்; தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை!