ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தங்களது பகுதியை சேர்ந்த மைக்ரோ நிதி நிறுவனத்திடம் தாங்கள் பெற்ற கடன் தொகையை செலுத்துவதற்கு உரிய கால அவகாசத்தை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.
இது குறித்து மனு வழங்கிய பெண்கள் கூறுகையில், "நிதி நிறுவனங்களிடமிருந்து கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 2019ஆம் ஆண்டு சிறு தொழில் செய்வதற்காக கடன் தொகையை பெற்றுள்ளோம்.
கரோனா ஊரடங்கிற்கு பிறகு எவ்வித வேலைவாய்ப்புமின்றி தடுமாறி வந்ததால் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையையும் வட்டித் தொகையையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரிசர்வ் வங்கி கரோனா ஊரடங்கின் போது நிதி நிறுவனங்கள் தவணைத் தொகை மற்றும் வட்டி தொகை கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தாவிட்டால் அவதூறாக பேசிவருகின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்றனர்.