ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவர், தனது விவசாய தோட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி மற்றும் ஜி9 ரக வாழைகள் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி நஞ்சுண்டன் தோட்டத்தில் நுழைந்து வாழைமரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன.
தோட்டத்தில், யானைகள் வாழைகள் முறிக்கும் சத்தம் கேட்ட விவசாயி நஞ்சுண்டன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். அதற்குள், 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தின. உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.