ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ருக்மணி (45). இவர் வாழைப்பயிர் சாகுபடி செய்துள்ளார். கன்றுகள் நடவு செய்து வளர்ந்து வரும் நிலையில், ருக்மணியின் விவசாய தோட்டத்திற்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து 200 வாழைக்கன்றுகளை சேதப்படுத்தின. வாழைத் தோட்டத்தில் காட்டு பன்றிகளின் கால்தடங்கள் பதிவாகியிருந்ததை பார்த்து வனத்துறையினருக்கு ருக்மணி தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டுப்பன்றிகள் சேதம் செய்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக முறையாக விண்ணப்பிக்குமாறு வனத்துறையினர் தெரிவித்தனர். விளாமுண்டி வனத்தில் இருந்து வந்த காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியதோடு, வனத்தையொட்டி உள்ள அகழியை வெட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடுமையான பனிப்பொழிவு: பூ விலை உயர்வு!