சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடையே உச்சகட்ட மோதலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இடைத்தேர்தலை தாண்டி அதிமுகவில் யார் உண்மையான தலைமை என்பதை நிரூபிக்க கூடிய தேர்தலாகவும் அமைந்துள்ளது.
இதனால் அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்ற ஈபிஎஸ் தரப்பினர் இடைத்தேர்தலில் வெற்றி அடைவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். கடந்த 23 ஆண்டு கால வரலாற்றில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் பணிகளை தொடர்ந்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் குழப்பமான சூழல் நீடிப்பதால் வேட்பாளரை அறிவிப்பில் தாமதம் உள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி இடையீட்டு மனு அளித்திருந்தனர்.
பழனிசாமியின் இடையீட்டு மனுவிற்கு 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்திப்பதை அதிமுக கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, "சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோருக்கு பாஜக ஆதரவு அளிக்காது" என தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இரட்டை இலையை நோக்கிய நகர்கிறது. ஒருவேளை ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் இவரது தரப்பு தனித்து போட்டியிடும் என கூறப்படுகிறது.
ஈபிஎஸ்சின் தரப்பு பல சாவல்களை இந்த இடைத்தேர்தலில் சந்திக்க இருக்கிறது. அதில், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை, பாஜகவின் நிலைப்பாடு, இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு, மற்ற கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை தாண்டி ஆளுங்கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளனர். இது போன்ற அனைத்து பிரச்சனைக்கான தீர்வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருப்பதாக ஈபிஎஸ் தரப்பினர் வெற்றி அடைவதற்கு பல்வேறு வகையான வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் நெசவு தொழில் சார்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மேலும் நகர்புறம் என்பதால் சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையே மையமாக வைத்து ஈபிஎஸ் தரப்பினர் காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதிமுக போட்டி என்ற ஈபிஎஸ்சின் இந்த முயற்சியால் பாஜக என்ன நிலைப்பாடு எடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளது. ஒருவேளை இரட்டை இலை முடக்கப்படால், அதற்கு காரணம் பாஜக தான் என்று ஈபிஎஸ் தரப்பினர் பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கின்றனர்.
அல்லது இரட்டை இலை சின்னம் கிடைத்தால், நான் தான் அதிமுகவின் அடுத்த தலைமை என்ற உற்சாகத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். எப்படி தீர்ப்பு வந்தாலும் அதை நமது தரப்பிற்கு சாதகமாக்க வேண்டும் என்பதில் ஈபிஎஸ் தரப்பினர் கவனமாக இருக்கின்றனர். 111 பேர் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸுக்கும் அதிமுகவிற்கும் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் அளவிற்கு பணம் விநியோகமும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "இரட்டை இலைக்காக நான் போராடினேன் என்ற பிம்பத்தை அதிமுக தொண்டர்களிடையே ஏற்படுத்துவதற்காக ஈபிஎஸ் முயற்சி செய்கிறார். இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று ஈபிஎஸ்க்கு நன்றாக தெரியும். ஈபிஎஸ் எப்படியானாலும் போட்டியிடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறார். உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சின்னம் தொடர்பாக 3 நாளில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவுவதால் இரண்டு அணிக்கும் சுயேச்சை சின்னம் தருகிறோம் எனவும் இது 3 நாளில் பதில் அளிக்க இயலாத விவகாரம் எனவும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும் என நினைக்கிறேன்" என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இது போன்ற பல வியூகங்கள் எடுபடுமா?, அதிமுகவின் ஒற்றை தலைமையை நிரூபிப்பாரா?, பாஜகவின் நிலைப்பாடு என்ன?, இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்!