ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பவானிசாகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜி.ரமேஷை ஆதரித்து விஜயபிரபாகரன் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தேர்தலில் முதல் முறையாக பரப்புரை செய்கிறேன். தேமுதிக மாற்றத்தை விரும்புகிறது. பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்கு கொடுத்த மரியாதையை அதிமுக ஏன் எங்களுக்கு தரவில்லை.
அரசியலில் கொடி பிடிப்பது பாட்டுப் பாடுவது முக்கியமல்ல. ஆனால் மக்கள் பிரச்னைக்காக கூட்டணி வைத்துள்ளோம். எங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். என்னை போன்ற இளைஞர்களுக்கு அரசியல் வெறி உள்ளதால் எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள். ஏன் எங்களை நீங்கள் ஆதரிக்கவில்லை. எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். தற்போது சாதி, மதம் மொழியை வைத்து அரசியல் செய்துவருகின்றனர். அரசியல் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறுகின்றனர். தற்போது 1000, 1500 ரூபாய் தருகிறேன் என கூறுபவர்கள் கரோனா காலத்தில் மக்கள் கெஞ்சியும் பணத்தை தரவில்லை. வாக்குக்காக பேரம் பேசுகின்றனர். அப்பா கொடுத்துக்கொண்டே இருக்க அட்சயப்பாத்திரம் இல்லை. அவர் சாதாரண மனிதன். நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போகாதீர்கள்.
வேலை, சினிமாவில் திறமைக்கு வாய்ப்புண்டு. ஆனால் அரசியலில் திறமைக்கு அங்கீகாரம் இல்லை. திறமையான ஆட்களை அரசியலுக்கு கொண்டுவாருங்கள். காசு கொடுத்து மக்கள் விலைக்கு வாங்க முடியும் என திமுக, அதிமுக நடம்புகின்றனர். உங்களால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியாதா" என கேள்வி எழுப்பினார்.