ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள சங்குநகர் பிரிவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் கிளை செயல்பட்டுவருகிறது.
இந்த ஏடிஎம் கிளைக்கு நள்ளிரவில் வந்த நபர் ஏடிஎம்மின் முகப்பைச் லாவகமாக கழட்டி, பணம் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவின் கட்டுப்பாட்டு அலாரம், கிளை வங்கியின் மேலாளர் அலைபேசியில் ஒலித்தது.
இதையடுத்து, வங்கி மேலாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை சாலைப் பகுதியில் இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி காவல்துறையினர் சங்குநகர் பிரிவுக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் ஈரோடு மாவட்டம் திண்டல், வள்ளியம்மை நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது.
இவர் இதற்கு முன்னதாகவே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏடிஎம் கண்காணிப்புக் கேமிராவில் பொருத்தப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அலாரம் ஒலித்ததால் அந்தக் கிளையிலிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.