ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நால்ரோடு கணபதிநகரைச் சேர்ந்த ஜெயராஜ்-ரோஸ்மேரி தம்பதியினரின் 15 வயது மகள் சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இயங்கிவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிவருபவர் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள மங்கரசு வலையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஷ் (20). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபாவிடம் காதல் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயராஜ் முருகேஷை கண்டித்துள்ளார்.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. திரையரங்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்றிருந்த ஜெயராஜிடம் முருகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, முருகேஷ் அருகே கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து ஜெயராஜை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பிறகு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஜெயராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தலைமறைவான முருகேஷை தேடிவருகின்றனர்.