ஈரோடு : நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கு முறைப்படி தான் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் சங்கங்கள் தூண்டிவிட்டதன் அடிப்படையில் நெடுஞ்சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவதாகவும் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்து உள்ளார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 350 படுக்கைகளுடன் அமைக்கப்படும் கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் அரசிடம் விதிமுறைகள் எதுவும் இல்லை. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சங்கங்கள் சாலைப் பணியாளர்களைத் தூண்டிவிட்டதன் அடிப்படையில் போராட்டம் நடைபெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தைத் தவிர்க்கும் வகையில் உயர்மட்ட பாலம் வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ள நிலையில், மறுமுறை டெல்லி செல்லும் போது நேரில் வலியுறுத்தி உயர்மட்ட பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத் துறையில் பணியாளர்களுக்கு முறைப்படி தான் பதவி உயர்வு வழங்கப்படும். விதிமுறைக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி கூறியதாவது, "அரசு கட்டுமானப் பணிகளில் தரத்தை உறுதி செய்வது குறித்து உரிய அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமில்லாத கட்டுமானப் பணிகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : பிளஸ் 2 ரிசல்ட்டில் 5 ஆண்டுகளாக 100% தேர்ச்சி - தஞ்சை மாற்றுத்திறனாளி மாணவ பள்ளிகள் சாதனை!