தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் சூழலில் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்ட 300 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே.30) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், ரோட்டரி சங்கம் சார்பில் 14 கோடி ரூபாய் மதிப்பில், கரோனா நோயாளிகளுக்கு 401 படுக்கைகள் கொண்டு கட்டப்பட்டு வரும் மாதிரி புகைப்படத்தைப் பார்வையிட்டார். பின்னர், ஐந்து மருத்துவர்கள், செவிலியருக்குப் பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பெரியார் பிறந்த மண்ணில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்!