ஈரோடு: ஈரோடு மாவட்டம், மேட்டுக்கடை அடுத்த கதிரம்பட்டியில் செயல்பட்டு வரும் 3826 என்ற எண்ணில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டியில், 'முதலில் எந்த துறையாக இருந்தாலும் அதில் பணி செய்பவர்களுக்குச் சரியான பாதுகாப்பு சூழல் இருக்க வேண்டும். அந்த வகையில், நேற்று முன்தினம் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினோம். பணியாளர்களிடம் என்னென்ன பிரச்னை உள்ளது என்பது குறித்தும் அதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர்களிடமே கேட்டு கலந்து உரையாடினோம். பல இடங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஒரு பிரச்னையாக இருக்கிறது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போதிய இடங்கள் இல்லை. முக்கியமாகப் பிரதான சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. அதன் காரணத்தால் கடைகளுக்குக் கூட்டம் வருகிற போது பொதுமக்களுக்கு அது இடையூறாகவும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து மூன்று கடைகளைத் தேர்ந்தெடுத்து தடுப்புகள் அமைத்துக்கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
இதையும் படிங்க: CM Breakfast Scheme: முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட உணவு பட்டியல் மாற்றம்!
இதில் தவறான விற்பனை வரக்கூடாது என்பது தான் முதலமைச்சரின் எண்ணமே தவிர, அதிகமாக விற்பனை செய்து அரசிற்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அல்ல. அதுமட்டுமில்லாமல் தவறான விற்பனை எங்கே நடக்கிறது என்பதையும், அதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் பள்ளி, கோயில்கள் அருகில் உள்ளது என புகார் வந்ததின் பேரில் மூடப்பட்டுள்ளது. அவ்வாறு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சில கடைகள் இதுபோன்ற புகார்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது என்றால், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் மூட கோரிக்கை வரும் கடைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
முக்கியமாக பள்ளி, கோயில் மற்றும் பிரதான மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலம் சட்டவிரோதமாக இடத்திற்குச் செல்லக்கூடாது.
டாஸ்மாக் கடையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறோம். ஒரு சில டாஸ்மாக் கடைகளில் நடந்த தவறை தமிழகம் முழுவதும் நடந்ததாக சங்கடத்தை ஏற்படுத்தியதால் இந்த முடிவினை தயங்கி தயங்கி எடுக்கிறோம்.
மூடப்பட்ட 500 கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் ஆட்கள் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு மாற்றப்படுவார்கள். அவர்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை. கண்ணாடி பாட்டில்களில் சில மாற்றங்கள் கொண்டுவர மேல்மட்டத்தில் விவாதித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்பட்ட அனைத்துத் துறைகளும் பிரச்னைகள் இல்லை என தெரிவித்ததும் முடிவெடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: ‘அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை' - அமலாக்கத்துறை விளக்கம்!