சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை குறைந்ததால், பசுமையாக காட்சியளித்த வனப்பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நேற்று ( மார்ச்7) மாலை ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது. மெதுவாக பற்றிய தீ பின்னர் கொழுந்துவிட்டு எரிந்தபடி வனப்பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆசனூர் தீயணைப்புத் துறையினரும், வனத் துறையினரும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்து தகவல் அளித்ததால் வனப்பகுதியில் சிறிய பரப்பளவில் மட்டும் மரம் செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உயிர் தப்பின.
இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம், வனப்பகுதி சாலையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீடி சிகரெட் உள்ளிட்ட துண்டுகளை வனப்பகுதிக்குள் வீசக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மீண்டும் இபாஸ் கட்டாயம்' - அதிரடி உத்தரவு