ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்திற்கு இடையே பேருந்து, சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இம்மலைப்பாதையில், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துக்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது மலைப்பாதையில் ஆங்காங்கே சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திம்பம் மலைப்பாதையில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளில் 3 மின் விளக்குகள் வீதம் 71 விளக்குகள் பொருத்தப்படும்.
சூரிய சக்தி வழியாக மின்சாரத்தை உருவாக்கி, பேட்டரியில் சேமித்து வைத்து இரண்டு நாட்கள் வரை இயங்கும் திறன்கொண்ட இம்மின்விளக்குள், மழைக்காலங்களிலும் தடையில்லாமல் இயங்கும்.
இதனால், திம்பம் மலைப்பாதையில் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.