ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் பட்டதாரிகளுக்கு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகான பதிவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் எனவும், மாலை 6 முதல் 8 மணி வரை நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
போதுமான அளவில் வேலை நாட்கள் இல்லாததால் 60 விழுக்காடு பாடத்தை நடத்த முடியாது என்ற கல்வியாளர்களின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், நாள்தோறும் ஒவ்வொரு கருத்தை கல்வியாளர்கள் கூறிவருவதாகவும், மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.