கரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை, கரும்பு, சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட 6 பொருள்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
காத்திருப்பு
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள வடக்குப்பேட்டை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுப் பொருள், பரிசுத் தொகை வாங்க பொதுமக்கள் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் காத்திருக்கின்றனர்.
முதலில் 200 குடும்ப அட்டைதார்களுக்கு டோக்கன் முறையில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் இடையூறு இன்றி தகுந்த இடைவெளியுடன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் வட்டம் போட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பு கம்பி
நியாவிலைக் கடையில் இடம் பிடிப்பதற்காக பொதுமக்கள் வரிசையாக கற்கள், கூடை, துணிப்பை ஆகியவற்றை வைத்து இடம் பிடித்துள்ளனர். பொதுமக்கள் வரிசையாக வருவதற்கு தடுப்புகம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் குடோனிலிருந்து இலவச வேஷ்டி சேலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் : திமுக மனு