ஈரோடு: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி பீகாரில் இருந்த வேலை தேடி கேரளாவிற்கு ரயில் மூலம் சென்றிருக்கிறார். அப்போது பீகாரைச் சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகவும், தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார். அவரை நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
ஏற்கனவே ஈரோடு ரயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களை அடைத்துவைத்த பிபீன் குமார் கும்பல் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.
மேலும், ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால்தான் தங்களை விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் என ஜிபே (Gpay) மூலமாக பணம் பெற்றனர்.
தொடர்ந்து அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட பிபீன் குமார் கும்பல், வால்மீகி உள்பட அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். பின்னர், அவர்களை டெம்போ டிராவலரில் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கொண்டு சென்று விட்டுச் சென்றனர்.
உடலில் காயங்கள் உடன் அங்கிருந்து சென்ற வால்மீகி உள்பட 6 பேரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து அங்கிருந்த காவல் துறையினரிடம் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு புகாரை அனுப்பி வைத்தனர். அதன் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரைச் சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குடும்பத்தை காப்பாற்றி அனைத்து உறவுகளையும் விட்டுவிட்டு குறைந்த ஊதியத்திற்காக மாநிலம் விட்டு மாநிலம் வரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளி மாநில தொழிலாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 4.39 லட்சம் ரூபாய் திருடிய CISF வீரர்..! காஷ்மீர் விரைந்துள்ள தனிப்படை போலீசார்..!