ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் மலை அடிவாரத்தில் 65 ஹெக்டேர் நிலப்பரபபில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் நீர்த்தேக்கம். இதன் முழு நீர்மட்ட அளவு 31அடியாகும். இந்த அணையில் 1.15 டிஎம்சி நீர் இருப்பு தேக்கிவைக்க இயலும். இந்த நீர்த்தேக்கம் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இதற்கு நீராதாரமாக உள்ளது. அணையில் நீர் இருப்பின்போது மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ரோகு, கட்லா, ஜிலேபி போன்ற ரகங்களைச் சேர்ந்த ஐந்து லட்சம் மீன்குஞ்சுகள் அணையில் விடப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக அணையில் நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாக்கம்பாளையம், கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வறண்டுகிடந்த பெரும்பள்ளம் அணையில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
தினமும் 200 கனஅடி நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினந்தோறும் உயர்ந்து, தற்போது 30 அடியாக உள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி 6 அடியாக இருந்து அணையில் நீர்மட்டம் தற்போது 30 அடியாக உயர்ந்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் முழு நீர்மட்ட அளவான 31 அடியை ஓரிரு நாள்களில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : மதுரை வந்தது வைகை அணை நீர் !