ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடைக்கான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில் இப்பகுதி பெண்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி டாஸ்மாக் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக்கினால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியரிடம் கூறி விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு; பொறியாளருடன் மக்கள் வாக்குவாதம்!