ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள 25 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 340 பெண்களுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.5,000 கடன் தொகை வீதம் இரண்டு லட்சத்து 22 ஆயிரம் பணத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மின்னணு குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் 83 நபர்கள், 21 காய்கறி வணிகர்களுக்கான கடன் தொகை என நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், 12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் வழங்கினர்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், "தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகைக்கு வட்டிச் செலுத்த தேவையில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு மாதம் ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.
வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளூர் ஓட்டுநர் மூலம் வாகனங்கள் மாவட்டத்திற்குள் எடுத்துவரப்படுகின்றன.
இதுவரை வெளிமாநிலங்களிலிருந்து வந்த 103 நபர்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். வெளிமாவட்டத்திலிருந்து வந்த 374 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 133 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதில் 90 சோதனைச்சாவடிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. வாகன பாஸ் தேதி முடிந்த பின்பு வாகனங்களைப் பயன்படுத்தினால் அவை பறிமுதல்செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!