ஈரோடு: அரச்சலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் மர்ம விலங்கை கண்டுபிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 3 இடங்களில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மர்ம விலங்கை பிடிக்கும் வரை யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம விலங்கு இரண்டு கன்றுக் குட்டிகளை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாடு, மர்ம விலங்கின் கால் தடத்தை சேகரித்து சென்றனர்.
இந்நிலையில், கன்றுக் குட்டிகளை இழுத்துச் சென்ற மர்ம விலங்கு, சிறுத்தை புலி அல்லது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகித்து உள்ள வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றிலும் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
மேலும் சம்பவ நடந்த இடத்தில் 3 கூண்டு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மர்ம விலங்கு பிடிபடும் வரும் வரை யாரும் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், தீர்த்த குமாரசாமி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்து உள்ளனர். இந்த நிலையில் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரச்சலூர், தலவுமலை, வெள்ளி வலசு உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரச்சலூர் கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் மர்ம விலங்கால் பொதுமக்கள் பிதியடைந்து உள்ளனர். இதனால் வனத்துறையினர் விரைந்து விலங்கை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: மது போதையில் பொது இடத்தில் ரகளை.. ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது!