ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணிக்குகூட வரவில்லை. நாங்களாவது இங்கு வந்துள்ளோம். தெரிந்தும் தெரியாததுபோல, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, அரசியலில் இருப்பதை காட்டுவதற்காக அதிமுகவினர் தெரிவித்து வருவது கண்டனத்துக்கு உரியது.
திமுக தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் புகார் கூறி வருவது, பின்னால் ஏற்படும் தோல்விக்கு முன்பே ஒரு காரணத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. இந்த குற்றச்சாட்டை அதிமுகவினர் கூறுவது, தோல்வி உறுதி என்பதை காட்டுகிறது. பாஜக, அதிமுக மாறி மாறி புறக்கணித்து வருவது ஒரு நாடகம் ஆகும்” என்றார்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேஎஸ் நகர், மரப்பாலம் வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் 75 சதவீதம் வாக்குகளை பெறுவோம். மக்களின் துயரத்தை துடைத்து இந்திய அளவில் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 3,346 அறிவிப்புகளில், 20 மாத ஆட்சி காலத்தில் 3,013 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டதில் இருந்து 90 அறிவிப்புகள் நிறைவேற்றிய அரசு, இந்த அரசு. தேர்தல் வாக்குறுதியில் 505 அறிவிப்பில் 236 அறிவிப்புகள் நிறைவேற்றபட்டுள்ளது. மீதம் உள்ள அறிவிப்புகளும் 5 ஆண்டுகள் முடியும் முன்பு நிறைவேற்றப்படும்” என்றார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன்ண்ணி, ‘தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக ஒரு வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் ஒரு நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது (ஏற்கனவே 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை உள்ளது). தேர்தல் விதி மீறல் நடப்பதாக வந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,681 பேர் உள்ளனர். இவர்களில் விருப்பமுள்ளவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 1,144 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேர்த்து மொத்தமாக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றார்.
இதையும் படிங்க: பல நூறு கோடி ரூபாய் ஊழல்:திமுக அரசு ஆபத்து -அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!