ஈரோடு மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து வஉசி பூங்கா பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட்டு, சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் கட்டப்பட்டுள்ள கொங்கலம்மன் கோயிலின் அன்னதான கூடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்.
மேலும், ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் 466 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் விழாவில் பங்கேற்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தேர்தல் வரும்போது மட்டுமே வாக்குறுதி தருவது அரசியல் கட்சிகளின் வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமையாக இருந்திருக்கிறது.
ஆனால், இந்த அரசு தேர்தலுக்கு முன்னரே விவசாயிகளின் கடன் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாயை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆளும் இந்த அரசு மனிதநேயத்தோடு மக்கள் பணியாற்றுகிற அரசாக இருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி ஆய்வுகளுக்குப் பின்னர் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும், முடிவை அவர் மேற்கொள்வார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!