ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'திமுக வெற்றிபெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும்' என்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனின் பொறுப்பற்றத்தன்மையான பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன், 'உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நிதியை பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்படும்' என பொறுப்புணர்வுடன் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு நல்ல மணம் உண்டு' என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மேற்கோள்காட்டிய செங்கோட்டையன், அக்கூற்றின்படி தங்குதடையின்றி சிறப்பான முறையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.
சிறுமுகை - காவிலிபாளையத்தின் கீழ்குளம் ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கு ஏதுவாக அவினாசி - அத்திக்கடவு திட்டத்துடன் இணைக்கப்படும் எனச் சொன்ன அவர், மத்திய அரசு நிதியின்றி தமிழ்நாடு அரசின் முழுபங்களிப்புடன் ஆயிரத்து 562 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவினாசி - அத்திக்கடவு திட்டம் வரப்பாளையம், சித்தோடு, நசியனூர் பகுதியில் வேகமாக நடைபெற்றுவருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: திமுக வென்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!