தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 159பயனாளிகளுக்கு 34 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, கே.எஸ். தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் தொற்று பாதிப்புள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை எந்தவித தகவல்கள் வரவில்லை. ஆன்லைன் மூலமாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பாதிப்பு கூடுதலாக இருக்கும் சென்னை போன்ற இடத்தில் வசிக்கும் மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் இதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பெற்றோர் அல்லது மாணவர்கள் புகாரளிக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம். 10,11,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு மையங்கள் அமைப்பு!