ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மதகுகளின் மூலம் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை சுமார் 56 மைல் தூரம் சென்று 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது.
தண்ணீர் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காலிங்கராயன், "வாய்க்கால் பாசனத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்று (டிச.25) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை 120 நாட்களுக்குத் திறந்து விடப்படும் விவசாயிகள் தண்ணீரைத் தேவையான அளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என தற்போது கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுடைய இது பழைய நடைமுறையில் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. நீர் மேலாண்மை செய்வதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றவில்லை என்றால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படும். அதே சமயம், தண்ணீர் வீணாகாமல் தடுப்பது அரசின் கடமை.
மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது வாய்க்காலைத் தூய்மையாகப் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு. கீழ்பவானி பாசன வாய்க்கால் 01.07.2024 முதல் 01.05.2024 வரை உள்ள 115 நாட்களில் 67 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், சுமார் 1 லட்சத்து 3000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
பாசன வாய்க்காலில் இருந்து குறிப்பிட்ட அளவு தள்ளியே கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். அதற்குள் இருந்தால் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டுமான நிறுவனங்கள் இதில் நீர் எடுப்பதாகப் புகார்கள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை புறம்போக்கு கட்டுமானம் என்பது ஒரு நாளில் நடைபெற்றது அல்ல கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். மேலும், அங்குப் பாதிப்புக்குள்ளான சாலைகள், வாய்க்கால்கள், கழிவுநீர் செல்லும் பாதை என அனைத்தும் கணக்கிடப்பட்டு அதைச் சரி செய்ததற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்கு என்ன நடைபெற்று வருகிறது என்பது தெரியாமல் தவறான கருத்துக்களைக் கூறுகின்றனர். பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் என பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் உரிய நிவாரணத்தை முதலமைச்சர் வழங்குவார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலி வெள்ளத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!