ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, கடந்த 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன்படி 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வேட்புமனு பரிசீலனை நேற்று (பிப்.8) நடைபெற்றது.
மேலும் இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட பல்வேறு சுயேட்சைகள் களமிறங்கி உள்ளன. அதேநேரம் அமமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இருப்பினும், அவரது வேட்புமனு பரிசீலனையில் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், அனைத்து கட்சிகளும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, திமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், அங்கு இருந்த உணவகம் ஒன்றுக்குச் சென்று பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேநீர் கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் முழு ஆதரவு - வஃக்பு வாரியத் தலைவர்