ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு இல்லம் தோறும் நூலகம் என்ற முழக்கத்துடன் 18வது ஆண்டாக புத்தகத் திருவிழா ஈரோடு சக்தி சாலையில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி முதல் 12 நாட்கள் நடைபெறுகிறது.
230க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில படைப்புகள் கொண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் புத்தக கண்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி இலக்கிய விழாவோடு நடத்தப்படும்.
பள்ளியறை பூங்கொத்து திட்டத்தை மீண்டும் நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு 3 மாதத்திற்கு ஒருமுறை பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.மீண்டும் நடமாடும் ஆலோசனை மையம் செயல்படும்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது கிடையாது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கணிவுடன் பரிசீலிப்பார்.
போதை பொருட்கள் பயன்படுத்துவதை கடந்த 10 ஆண்டுகளாக தடுக்காத காரணத்தால் அதிகரித்துள்ளதை முதலமைச்சரின் உத்தரவுக்குப்பிறகு காவல்துறையினர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என பேசினார்.
இதையும் படிங்க: சொந்த ஊரில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர தொழில்துறை முதன்மைச்செயலாளர்