ஈரோடு: பெருந்துறை அடுத்து உள்ள நல்லம்மா நகரில், மங்கை வள்ளி கும்மி குழுவினரின் 100வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மண்ணின் பெருமையை அறிவோம், பாராம்பரிய கலைகளை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் கொங்கு பாடல்களை பாடி, 5 ஆயிரம் பெண் கலைஞர்கள் ஒரே மாதிரியான பாராம்பரிய சீருடையில் பங்கேற்று நடனமாடினர்.
பின்னர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "வள்ளி கும்மியாட்டம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்க உதவும் பயிற்சி. இந்த கும்மியாட்டத்தின் மூலமாக சமுதாய உணர்வுகள் நல்ல முறையில் பெருகி வருகிறது. இதனால், இளைஞர்கள் நமது வரலாற்று பெருமைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.
பல்வேறு தரப்பினர் மூலமாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும், வள்ளி கும்மி மூலம் நமது பெருமைகள் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மற்ற கலைகளுக்கு விருதுகள் வழங்குவது போன்று, வள்ளி கும்மி நிகழ்ச்சிக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், வள்ளி கும்மி ஆட்டத்தில் குறிப்பிட்ட சமுதாய பெண்களிடம் சத்தியம் வாங்குவது, குறிப்பிட்ட சமுதாய மக்களை மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது இல்லை.
வள்ளி கும்மி கலைநயத்தை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் விதத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சமூகம் மட்டுமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குப்பெறலாம்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளனமான பொதுமக்கள் வருகை தந்ததால் அப்பகுதி முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது.
இதையும் படிங்க: புயல் எதிரொலி - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!