ஈரோடு: அந்தியூர் அடுத்த பர்கூரில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, மின் வேலி அமைத்து யானை பலியாக காரணமாக இருந்த விவசாயியை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானி சாகர், அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட வனப்பகுதி புலி, யானை, மான், காட்டு எருமை, கரடி, பன்றி உள்ளிட்ட பல வன உயிரினங்களின் வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் வன விலங்குளினால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்தில் உள்ள பயிர்களை பாதுகாக்கும் வகையில் மின் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தம்புரெட்டியை சேர்ந்தவர் புட்டன் (வயது 32). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், மக்காச்சோளம், கேழ்வரகு சாகுபடி செய்துள்ளார். மேலும், வன விலங்குகள் பயிர்களை சேதம் செய்வதை தவிர்த்து, பயிர்களை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று புட்டனின் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது, மின்வேலியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் வனத்துறையினர், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் உயிரிழந்த யானையை புதைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விவசாயி புட்டனை பர்கூர் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஒரே அரசு திமுக தான்" - தஞ்சையில் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு