ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பாரதியார் நகரில் கடந்த 2009ஆம் ஆண்டு கிராம ஊராட்சி நூலகம் திறக்கப்பட்டது. இதற்காகவே தனி கட்டடமும் கட்டப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் மட்டும் செயல்பட்ட இந்த நூலகம் பின்னர் மூடப்பட்டது.
தற்போது கரோனா விடுமுறையைக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் நினைவில் மீண்டும் கற்றல் ஆர்வத்தைக் கொண்டுவரும் நோக்கிலும், வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ரீடு தன்னார்வ நிறுவனம் இந்நூலகத்தை 9ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்துள்ளது.
இந்த நூலகத்தில் தற்போது பள்ளி, கல்லூரி புத்தகங்கள், அறிவு சார்ந்த புத்தகங்கள், விஞ்ஞானிகள் கட்டுரைத் தொகுப்பு, அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, தமிழ்-ஆங்கில அகராதிகள், குழந்தைகள் பாட்டு ,பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இது தவிர தினசரி பத்திரிகைகளும் வாங்கப்படும், இதனால் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
இன்று (டிச.6) நடைபெற்ற நூலக திறப்பு விழாவில் சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி கலந்துகொண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் 50 குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நூலகத்தில் இரண்டு ஆசிரியர்கள் காலை, மாலை என இருவேளைகளில் இலவச பாட வகுப்புகள் நடத்தவுள்ளனர்.