ஈரோடு: அந்தியூர் அடுத்துள்ள சங்கராப்பாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மற்றும் புஷ்பா தம்பதி. இவர்களது மகன் முருகேசன். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், மகனும் உள்ளனர்.
முருகேசனுக்கு சொந்தமாக அதே பகுதியில் 2.30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்களது நிலத்திற்கு அருகே மற்றொரு முருகேசன் என்பவருக்கு 4-எக்கர் விவசாய நிலம் உள்ளது.
இருதரப்பினருக்கு உள்ள விவசாய நிலத்தில் வழித்தடம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகேசனுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் விவசாய நிலத்திற்குள், அத்துமீறி நுழைந்த மற்றொரு தரப்பினர் நிலத்தில் உழவு வேலையை செய்து வந்தனர்.
இதனை தட்டி கேட்டபோது ஏழு பேர் கொண்ட கும்பல் முருகேசனையும், அவரது மனைவி கிருத்திகா மற்றும் அவரது தாய் புஷ்பா ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது முகத்தில் மயக்க மருந்து தெளித்து காயப்படுத்தியதுடன் மனைவி கிருத்திகாவை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகராறில் காயம் பட்ட கிருத்திகா மற்றும் புஷ்பா ஆகியோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அடிதடி தகராறு சம்பந்தமாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி முருகேசன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து நிறுத்தத்தில் மாணவன் தாலி கட்டிய விவகாரம்; காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி