ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லவி (28). இவரது கணவர் பிரபு, கட்டடத் தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி, கடந்த நவம்பர் 29ஆம் தேதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, டிச.1-ஆம் தேதி இரவு பல்லவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) குழந்தையை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் பல்லவி, சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க விரும்பியதாகவும், ஆனால் டாக்டர்கள் வற்புறுத்தியதால், அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு பிரசவ வலியை விட ஊழியர்கள் அவமரியாதையாகவும், ஆபாசமாகவும் திட்டியது மிகவும் வேதனை அளித்ததாகவும், பிரவச வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாற்ற ரூ.500 கையூட்டு கேட்டு தொந்தரவு செய்வதாகவும், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த ஈரோடு மாவட்ட இணை இயக்குநர் அம்பிகா சண்முகத்திடம் அப்பெண் புகார் கூறி உள்ளார்.
இப்பெண்ணின் புகார் குறித்து தலைமை மருத்துவர் தங்க சித்ராவிடம் இணை இயக்குநர் விசாரணை நடத்தி உள்ளார். இதையடுத்து, மருத்துமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தகாத வார்த்தைகளில் பேசிய மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மேலும், பிரவச நேரம் நெருங்கியதால் மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற அறுவை சிகிச்சை நடத்தியிருக்கலாம் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து மருத்துவ ஊழியர்களின் செயலுக்கு அப்பெண்ணிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் வருத்தம் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து புகாரளித்த பெண், புகாரை வாபஸ் பெறுவதாக கூறிச் சென்றார். அப்போது இது போன்று வருங்காலத்தில் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தங்கசித்ராவிடம் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்!