ஈரோடு: பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரத் (65) - ஷீலா (60) தம்பதி. இவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் கேரள மாநிலத்திலுள்ள கொச்சினிலிருக்கும் மருத்துவமனை நோக்கி வாடகை ஹெலிகாப்டர் எடுத்துச் சென்றுள்ளனர்.
பைலட் கர்னல் ஜஸ்பால் ஹெலிகாப்டரை இயக்கினார். இவருடன் பொறியாளர் ஹேங்கட் சிங் இருந்தார். ஹெலிகாப்டர் ஈரோட்டிலுள்ள சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அதிகமான பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக சரிவர சமிக்ஞை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
![ஹெலிகாப்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14131374_erd.jpg)
இதனால் பைலட் ஜஸ்பால், கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் பெருமாள் அம்மாள் என்பவரது வேளாண் நிலத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்கினார்.
ஹெலிகாப்டர் விவசாய விளைநிலத்தில் தரையிறங்குவது கண்ட மலை கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் சென்று பார்த்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கடம்பூர் காவலர்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து வானிலை நிலவரம் சரியானவுடன், ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் அனுமதி