உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தாக்கி அவமானப்படுத்தினர்.
உத்தரப் பிரதேச காவல் துறையினரின் இந்தப் போக்கை கண்டித்தும், அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில், ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய உத்தரப் பிரதேச காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்று தெரிந்தும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான நிலையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதியும், உரிய நிவாரணமும் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: என்னை தள்ளிவிட்டதை நான் பெரிதாக கருதவில்லை - ராகுல் காந்தி