ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் ஆண்டுதோறும் உழவர் திருநாளான மாட்டு பொங்கலன்று பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளின் உருவங்கள் யானை, மான் உள்ளிட்ட பலவகை வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் குழந்தைகள் உருவங்களை களிமண்ணால் செய்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று உருவங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் இந்தாண்டும் கால்நடைகளின் உருவங்கள் வீட்டு விலங்குகளின் உருவங்கள் மற்றும் வனவிலங்குகளின் உருவங்களை கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்து களிமண்ணால் செய்ய ஆரம்பித்து 100க்கும் மேற்பட்ட உருவங்களை வடிமைத்து மாட்டு பொங்கலான இன்று அனைத்து உருவங்களையும் தலையில் சுமந்து கொண்டையம்பாளையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன்கோயிலுக்கு எடுத்துச்சென்றனர்.
அங்கு மண்பானையில் பொங்கல் வைத்து மாதேஸ்வர சாமிக்கு படையலிட்டு இந்த களிமண்ணால் ஆன உருவங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இவ்வாறு செய்வதினால் கால்நடைகள், வீட்டுவிலங்குள் மற்றும் வனவிலங்குகளுக்கு நோய் மற்றும் உடல்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும், இதனால் ஆண்டு தோறும் பெய்யவேண்டிய மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அதேபோல் இந்த கோயிலில் உருவ வழிபாடு செய்த பின்னர் இங்குள்ள கிணற்று நீரை தீர்த்தமாக எடுத்துச்சென்று வீட்டில் உள்ள கால்நடைகள் வீடு மற்றும் விவசாய நிலங்கள் உழவு பணி கருவிகளுக்கு தெளித்த பின்னர் தொழுவத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளுக்கு உணவு வழங்கி சிறப்பு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழிபாட்டில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.