ஈரோடு: பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் காலம் ஆட்சி முடிவடைந்த நிலையில், 9 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்த சாதனைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில், ஈரோடு சோலார் பகுதியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று(ஜூன் 30) நடைபெற்றது.
இதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நரிக்குறவர்கள் சமுதாய மக்களை மேடையில் அழைத்து நலம் விசாரித்தார்.
அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ''இந்தியாவில் 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது மக்கள் மத்தியில் சமநிலை இல்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் உலக அளவில் இந்தியா 11வது இடத்திலிருந்தது. ஆனால், 2022ம் ஆண்டு 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
9 ஆண்டுகளில் எந்த ஒரு நாடு இந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டதில்லை. இந்தியா அந்த வளர்ச்சியை எட்டி உள்ளது. மேலும், லஞ்சம் இல்லாத மத்திய ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதை பிரதமர் 9 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் செய்து காட்டி இருக்கிறார். மேலும், பிரதமர் மோடி தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். அதிலும் முக்கியமாக திருக்குறளை எடுத்துச் செல்கிறார். இதுவரை திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் லால் சலாம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலையார் கோயிலில் ரஜினிகாந்த்!
வருகிற 2024ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். 3வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பார். தமிழகத்தில் 39 தொகுதிகளில் 39 தொகுதிகள் பாஜக, பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறுவார்கள். மேலும், 2024ம் ஆண்டு தேர்தலில் சித்தாந்த அடிப்படையில் வெற்றி பெறும்.
மேலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்கிறார், பிரதமர். அவர் கொண்டு வருவார். 1956ஆம் ஆண்டிலேயே பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இந்துக்கள், அது வரை இந்துக்கள் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு சடங்கு, சம்பிரதாயம் இருந்தும் இந்த சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். அதேபோல் அனைத்து மதத்தினரும் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை எதிர்க்கிறார்.
பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு லட்சம் பிரதிகள் அனுப்பப்படும். இதை இந்தியாவில் மோடியால் மட்டுமே கொண்டு வரமுடியும். நாங்கள் இங்கே கீழ்பவானி பாசனம் தந்த ஈஸ்வரனை நினைவுகூர்ந்து மேடையில் படம் வைக்கிறோம். ஆனால், நீங்களோ ஊழல் செய்த செந்தில் பாலாஜி புகழ் பாடுகிறீர்கள். தமிழக முதலமைச்சர் அவரை காப்பாற்றியே ஆவேன் என்கிறார்.
என்னதான் சித்தாந்த அடிப்படையில் முழுமையாக வேறுபாடு இருந்தாலும் கூட இரண்டு ஊழல் அமைச்சரை கருணாநிதி நீக்கினார். தனது அப்பாவிடம் இருந்துகூட பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?'' என்றார். மேலும், சித்தாந்தம் அடிப்படையில் இரண்டு ஊழல் அமைச்சரை கருணாநிதி நீக்கினார். 2026 தேர்தலில் பட்டிபோட செந்தில் பாலாஜி வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதனால் '2024ம் ஆண்டு தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். இதை யாராலும் தடுக்க முடியது. மோடியின் 9 அண்டுகள் கால ஆட்சிக்காலத்தில் 10க்கு 10 என்றால், திமுகவின் ஆட்சி 10க்கு ஜீரோ' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முறைகேடு... முழு விவரம் என்ன?