ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் கோழி திருடியதாக இரு பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், விவசாயிகள், கிராம மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக கூறியதையடுத்து, போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், போராட்டம் ரத்து செய்வதாக கிராம மக்கள் அறிவிதிருந்த நிலையில் கோபி நகர எல்லைகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் உள்ள வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை திருடிச்சென்றதாக, கடந்த 21 ஆம் தேதி இரண்டு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து தாக்கிய பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள், மீது திருட்டில் ஈடுப்பட்டது தொடர்பான வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கோழி திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சிலர் சிறுநீர் கழித்தும் சாதிப் பெயரை குறிப்பிட்டும் அவதூறாக பேசியதாகவும், 20 பேர் மீது கடந்த 24 ஆம் தேதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து இன்று (டிச.7) அன்று பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து பேரணியாக சென்று கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக அனைத்து சமுதாய ஊர் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், மாவட்ட காவல்துறை இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு தடை விதித்தது. இதனை மீறும் பட்சத்தில் தகுந்த சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டதால் பேரணி மற்றும் போராட்டம் செய்யப்பட்டதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
போராட்டம் ரத்து என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பாதுகாப்பு நலன் கருதி கோபி பகுதியில் காவல்துறை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் 3 ஏடிஎஸ்பிகள், 7 டிஎஸ்பிகள், 20 ஆய்வாளர்கள், 170 ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், 500 சட்டம் ஒழுங்கு போலீசார் என மொத்தம் 750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வருண் -1, வஜ்ரா -3 வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ரூ.4,000 கோடி என்ன ஆனது? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!