கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் 15 நாள்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை ஆண் யானையை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்திப் பிடித்தனர். இந்த ஆண் யானை இதுவரை மூன்று பேரை மிதித்துக் கொன்றுள்ளது.
ஓசூரில் பிடிபட்ட யானையை சத்தியமங்கலம் தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தனி வாகனத்தில், யானை சத்தியமங்கலம் வந்து சேர்ந்தது. இதனையடுத்து தெங்குமரஹடா வனப்பகுதியில் யானையைக் கொண்டுவிட வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே, தெங்குமரஹடா வனப்பகுதியில் யானையைக் கொண்டுவிட காராட்சிக்கொரை கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
மூன்று பேரைக் கொன்ற காட்டு யானையை, இந்தப் பகுதிக்குக் கொண்டுவரக்கூடாது என்றும், வேறு பகுதிக்கு கொண்டுச் செல்லுமாறும் அவர்கள் வலியுறுத்தி, இரவிலும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓசூர் அருகே பிடிபட்ட ஒற்றை யானை!