ஈரோடு மாட்டம் பவானிசாகர் அருகே அன்னேகவுண்டன்பாளையம் காலனி உள்ளது. இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கூலித்தொழிலாளர்கள் 21 பேருக்கு கடந்த 1991ஆம் ஆண்டு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரை காங்கிரீட் காரைகள் பெயர்ந்து வீட்டில் இடிந்து விழுகின்றன.
மழைகாலங்களில் கான்கிரிட் மேற்கூரையில் மழைநீர் புகுந்து அவை சேதமடைந்துள்ளன. இதனால் அவ்வவ்போது கான்கிரீட் காரைகள் பெயர்ந்து வீட்டினுள் விழுகின்றன. இடிந்து விழும் வீட்டில் ஆபத்தை எதிர்நோக்கி குடியிருக்க முடியாத சூழலில், 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். மாறிச்செல்ல வசதியில்லாத 15 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் மாற்றுவழியின்றி இடிந்து விழும் வீட்டில் வாசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரூபா - கார்த்தி தம்பதிக்கு சில நாள்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த தம்பதியின் வீட்டின் மேற்கூரைகளும் காரைகள் பெய்ந்து விழுகின்றன. இது குறித்து ரூபா கூறுகையில், “பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான இந்ததொகுப்பு வீட்டில் வசிக்கிறோம். தற்போது கூரைகள் பலமிழந்து கம்பிகள் தொங்கியபடி எந்த நேரத்தில் விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து,“ கடந்த 3 வருடங்களாக அரசிடம் முறையான புகார் அளித்தும் மாற்றுஇடத்தில் வீடு கட்டித்தரப்படவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள் மற்ற நேரங்களில் இந்த பக்கம் தலைகாட்டவில்லை” என புகார் தெரிவித்தார். விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு மாற்று வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...டியூசன் எடுக்க இடமில்லை... சாலையோர மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் இளைஞர்!