ஈரோடு: ஈரோடு மாமன்றத்தின் இயல்பு கூட்டமும், அதைத் தொடர்ந்து அவரசக் கூட்டமும் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை மேயர் செல்வராஜ் மற்றும் ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இவற்றில் 6 வார்டுகளில் அதிமுகவும், மீதமுள்ள 54 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிகள் கட்சிகளும், சில சுயேட்சை கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர்.
எண்ணில் அடங்கா பிரச்னைகள்: மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னை, கட்டி முடிக்கப்பட்ட 2 வணிக வளாகங்கள் திறக்கப்படாமல் இருப்பது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள ஜவுளிக் கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை சாலை, மேட்டூர் சாலை, காவேரி சாலை, ஆர்கேவி ரோடு மற்றும் பன்னீர்செல்வம் பூங்கா, பழுதடைந்த சாலைகள், எரியாத மின்விளக்குகள் என பல பிரச்னைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மாமன்ற கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவுன்சிலர்கள் சிலர், சூடாக தேநீர், சுண்டல்,மிச்சர் உள்ளிட்ட காரசாரமான உணவுப் பொருள்களை உண்டு விட்டு, வாட்ஸ் அப்பில் தங்களுக்கு வந்த மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்து கொண்டு இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சனாதன தர்மம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!