ஈரோடு: காலிங்கராயன் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.
அப்போது, அவரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நீட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ஒழித்து விடுவோம் என்று நாங்கள் கூறவில்லை அதற்கான முயற்சி மேற்கொள்வோம் என்று தான் கூறினோம். மாநில அரசின் கட்டுப்பாடின் கீழ் இருந்தால் உடனடியாக அதை ஒழித்து இருப்போம். நீட்டை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் திமுக எடுத்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்தைமீறி கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, பவானி நதியில் எந்தெந்த இடங்களில் தடுப்பணை கட்டி நீர் சேகரிப்பது குறித்து பொதுப்பணித்துறை ஆய்வு நடத்துகிறது.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் 1,450 குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது இதுகுறித்த ஆய்வறிக்கை கிடைத்ததும் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைப்பார். கோபி தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்தெல்லாம் முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்.
கீழ்பவானி பாசன கால்வாயை நவீன மயமாக்குவது குறித்து திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு அரசு உத்தரவுக்கும் உட்பட்டு ஆலோசனைகள் பரிசிலிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுக் குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு மீண்டும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?