நீலகிரி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நாட்டின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள புலிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், வனத்துறையினர் ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த அரசூர் என்ற கிராமத்தில் சிலர் தற்காலிகமாக கூரை அமைத்து தங்கி உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடத்தை சோதனை செய்தனர். அதில் சாக்குப் பையில் புலித்தோல், புலி நகம் மற்றும் எலும்புகள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சந்தர் (50) ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த புலித்தோல், புலி நகம் மற்றும் எலும்புகள் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இவர்கள் புலித்தோலை கடத்தி வந்தது எப்படி, எதற்காக தமிழ்நாட்டில் தங்கினர், வேறு எங்காவது வேட்டையில் ஈடுபட்டனரா? இதில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நீலகிரி வனக்கோட்டம் அவிலாஞ்சி வனப்பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு வெள்ளை புலிகள் காணப்பட்ட நிலையில் சமீப காலமாக அந்த புலிகளை காணவில்லை என்றும் புலிகள் வேட்டையாடப்பட்டதா அல்லது அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டதா என்பதை வனத்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் பவாரியா கொள்ளையர்கள் என்பதால் அவர்கள் உடன் வந்தவர்கள் யாரேனும் மற்ற பகுதிகளில் தங்கி வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுகிறார்களா என்பதையும் கண்டறிந்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் எனம் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!