சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9-ம் தேதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார். அதன் பின்னர், ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது, திமுக - 132, அதிமுக - 66, தேசிய காங்கிரஸ் - 17, பாட்டாளி மக்கள் கட்சி - 5, பாஜக - 4, விசிக - 4, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, சபாநாயகர் ஒருவர் என உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லேப்டாப் சார்ஜர்களில் நூதன முறையில் தங்கம் கடத்தல்.. குருவி சிக்கியது எப்படி?