ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி முதியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேவசாமி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஒன்று மாதேவசாமி பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிருக்குள் நுழைய முயன்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதைக் கண்டனர்.
இதையடுத்து யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் பிரேதப் பரிசோதனை செய்ததில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில் மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சியதை உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் மாதேவசாமி மீது ஆசனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சிய மாதேவசாமியை வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: