ஈரோடு: ஈரோடு அடுத்த திண்டலில் இயங்கி வரும் வேளாளர் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தாளாளர் எஸ்.துரைசாமி கவுண்டரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டல் வேளாளர் கல்லூரியில் அமைக்கப்பட்ட துரைசாமி கவுண்டரின் சிலையை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கல்விச் செல்வமானது யாராலும் பறிக்க முடியாத செல்வம். கல்வி வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர் துரைசாமி கவுண்டர். துரைசாமி கவுண்டர் கல்விப்பணி மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளிலும் சாதனை படைத்தவர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 60 மக்களுக்குத் தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தவர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்களுக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் படித்த ஏழைப் பெண்கள் திருமண வயதை எட்டும்போது தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
அம்மா இருசக்கர மானியத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவு கடன் உதவி வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம், மேலும், நாட்டிலேயே உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக இருந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, உயர்கல்வி படிப்பவர்களின் சதவீதம் 100க்கு 35 சதவீதமாக இருந்தது. அதன்பின், அதிமுக ஆட்சியிலிருந்த போது உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் 2019 -2020 ஆம் ஆண்டு உயர்கல்வி படிப்பவர்களின் சதவீதம் 100க்கு 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை கடந்த 2019 ஆம் ஆண்டில் அடைந்தோம். அதிமுக ஆட்சியிலிருந்த போது பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு தேசிய அளவில் விருதுகள் பெற்றோம். இப்போது மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது.
கல்லூரி படிப்பு மிக முக்கியம். கவனம் வேண்டும். பெற்றோர்களின் கனவு நினைவாக வேண்டும். ஒழுக்கம் மிகவும் முக்கியம். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வரும் நிலையில், போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது” என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.வி.ராமலிங்கம், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் தந்தையைத் தேடிச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு.. சென்னையில் நிகழ்ந்த சோகம்!