ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தலில் தனிநபர் வெற்றியை விட மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதை பெருமையாக கருதுவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வரும் 27ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான (Erode East by Election 2023) வேட்புமனு தாக்கல் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (பிப்.3) தனது கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனது மகன் திருமகன் ஈவெரா விட்டு சென்ற நல்ல பணிகளை தொடர்ந்து செயலாற்ற காத்துக்கொண்டு இருக்கிறேன். இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியை தனிநபர் வெற்றியாக இல்லாமல் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியாக இருக்கும்.
ஈரோடு மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல், சாயக்கழிவு நீர் தடுப்பது மற்றும் ஜவுளித் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற பணிகளை வெற்றி பெற்றவுடன் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''நல்ல நேரத்தில் ஏன் அண்ணாமலை பற்றி கேட்கிறீர்கள்'' என்று செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய இளங்கோவன், ''திமுக கூட்டணி நிர்வாகிகள் தனது வெற்றிக்காக உறுதுணையாக உள்ளனர்" எனக் கூறினார்.
’என்னைப் பொறுத்தவரை தன்னுடைய காலத்தில் ஈரோட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறேன்’ எனக் கூறினார். இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: Erode East By Poll: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சி!