ஈரோடு மாநகராட்சி காளை மாட்டு சிலை பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கனவே இருந்த மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு அகற்றப்பட்டு, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14.94 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இதை தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே குடியிருப்புக்குள் இருந்த சாமி சிலைகள், அங்கிருந்து அகற்றப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 10) காலை சாலையோரம் மேடை அமைத்து ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன், முருகன், விநாயகர் கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஜூனியர் பொறியாளர் ஆனந்த் உத்தரவின் பேரில், கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர் சுரேந்திரன், சாமி சிலைகளை நிறுவினார்.
இதுபற்றி தகவல் அறிந்த தி.க.வினர், சாமி சிலையை சாலையோரம் நிறுவ கூடாது என்று கூறி கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி காவல்துறையினர், சாமி சிலைகளை ஒப்பந்ததாரர் மூலம் அப்புறப்படுத்த செய்தனர்.
சாமி சிலை வைக்க அமைக்கப்பட்ட மேடை இடித்து அகற்றப்பட்டது. சிலைகள் பாதுகாப்பாக கட்டுமான பணி நடக்கும் இடத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமி சிலைகள் அகற்றப்பட்ட தகவல் அறிந்து பா.ஜ.வினர் சிலர், அங்கு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் இருதரப்பினரிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.