உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் வீரியம் அடங்குவதற்குள்ளாகவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஈரோடு மாவட்ட அழகு நிலைய உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் தங்கள் அழகுநிலையங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின்போது மாவட்டம் முழுவதுமுள்ள இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட அழகு நிலையங்களையும், ஈரோட்டில் 250-க்கும் மேற்பட்ட அழகு நிலையங்களும் அடைக்கப்பட்டன. மேலும் அழகு நிலையங்களைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை குறைக்க, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:'துணைவேந்தர் சூரப்பாவுடன் துணை நிற்போம்!'